நடப்புக்கு வந்த முதல் நாளிலேயே வியாபாரி மீது சட்டம் பாய்ந்தது

நடப்புக்கு வந்த முதல் நாளிலேயே வியாபாரி மீது சட்டம் பாய்ந்தது

கோப்புப் படம்: இந்திய ஊடகம்

01 Jul 2024 - 7:17 pm

1 mins read

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கட்கிழமை (ஜூலை 1) அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் 2023ன் கீழ் சாலையோர வியாபாரி ஒருவர் மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி ரயில் நிலையத்தின் நடை மேம்பாலத்தின் கீழ் இடையூறு விளைவிக்கும் வகையில் கடை வைத்திருந்ததாக குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 285ன் கீழ் அவர் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளது.

முதல் தகவல் அறிக்கையின் படி குற்றவாளியின் பெயர் பங்கஜ் குமார் என்றும் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிதாக இயற்றிய மூன்று குற்றவியல் சட்டங்கள் திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு தயாரித்துள்ளது.

இவை இந்தியர்களால் இந்தியர்களுக்காக இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்