இந்தியா உருவாக்கியுள்ள ஆற்றல்வாய்ந்த வெடிமருந்து

2 mins read
a2fee5cf-3668-462a-8198-3303840bc71e
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ‘செபெக்ஸ் 2’ உலகின் மிக சக்தி வாய்ந்த அணுகுண்டு அல்லாத வெடிமருந்துகளில் ஒன்று.  - படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: ‘டிஎன்டி’ எனப் பரவலாக அறியப்படும் ‘டிரைநைட்ரோடோல்யுவீன்’ வெடிமருந்தைவிட 2.01 மடங்கு அதிக சக்தி கொண்ட ஒரு புதிய வெடிமருந்தை இந்தியா உருவாக்கியுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ சான்றிதழையும் அந்நாடு பெற்றுள்ளது.

நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான, எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ‘செபெக்ஸ் 2’ ‘செபெக்ஸ் 1’, ‘செபெக்ஸ் 4’ ஆகிய மிக சக்திவாய்ந்த வெடிமருந்துகளை உருவாக்கி உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெடிமருந்துகள் இந்தியப் பாதுகாப்புத் துறையின் ஆற்றலை மேலும் பெருக்கியுள்ளது.

அதிக ஆற்றல் கொண்ட செபெக்ஸ் 2, உலகின் மிக சக்தி வாய்ந்த அணுகுண்டு அல்லாத வெடிமருந்துகளில் ஒன்று. புதிய வெடிமருந்துக் கலவையை, இந்தியக் கடற்படை விரிவாகச் சோதனை செய்து, சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த வெடிமருந்துக் கலவை மூலம் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படைகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள், பீரங்கிக் குண்டுகள், போர் ஏவுகணைகள் அதிக அழிவுத் திறனை பெற உள்ளது.

அதாவது, ஒரு கிலோ ‘டிஎன்டி’யைப் பயன்படுத்தும் இடத்தில் 500 கிராம் வெடிமருந்தைப் பயன்படுத்தினால் போதும், அதே அளவிற்கான தாக்கத்தையும் அழிவையும் ஏற்படுத்தும்.

உலகமெங்கிலும் உள்ள ராணுவங்கள் தங்களுடைய ஆயுதங்களின் திறனை அதிகரிக்க விரும்புவதால், இந்திய வெடிமருந்துக்கு வெளிநாட்டு ஏற்றுமதி சந்தையிலும் பெரும் வரவேற்பு இருக்குமெனக் கருதப்படுகிறது.

நிறுவனம் செபெக்ஸ் 2 மட்டும் அல்லாமல் செபெக்ஸ் 1, செபெக்ஸ் 4 ஆகிய இரண்டு வெடி மருந்துகளையும் உருவாக்கியுள்ளது. அடுத்த 6 மாதத்தில் மேலும் அதிக சக்திவாய்ந்த மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்