நெல்லூர்: ஆந்திரப் பிரதேச மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் 36 மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச்சென்ற பள்ளிப்பேருந்து மீது லாரி மோதியது. இந்தச் சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே பேருந்தின் உதவியாளர் உயிரிழந்ததாக நெல்லூர் காவலர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மாணவர்கள் பலரும் காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் காவாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள் என்று நெல்லூர் காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் டி சின்ன மல்லேஸ்வர ராவ், 60, என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மாநிலக் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவாலி அருகே பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய சம்பவம் என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் பேருந்தின் உதவியாளர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது.
“விபத்தில் காயமடைந்த குழந்தைகளுக்கு உடனடியாக சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி உரிமையாளர்கள் அனைத்துப் பேருந்துகளையும் நல்ல நிலையில் வைத்திருக்கவேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிப் பேருந்தின் பின்னால் வந்த லாரி மோதியதில், பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
நெல்லூர் மாவட்டம், காவாலியில் 16வது தேசிய நெடுஞ்சாலையில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. பேருந்து ஆர்எஸ்ஆர் அனைத்துலகப் பள்ளிக்குச் சொந்தமானது என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.

