உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹாத்ரஸ் நகரில் நடந்த சமய நிகழ்வின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 50 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அதனால் மாண்டோர் எண்ணிக்கை உயரக்கூடுமென அஞ்சப்படுவதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் கூறின. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சமய நிகழ்வவில் கட்டுக்கடங்காமல் கூட்டம் திரண்டதால் இப்பேரிடர் ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
படுகாயம் அடைந்தவர்கள், வேன்கள், அவசர மருத்துவ வண்டிகள் ஆகியவற்றின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஹாத்ரஸில் நடந்துள்ள அந்தத் துயரச் சம்பவம், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, உடற்கூறாய்வுக்காகக் கொண்டுசெல்லப்பட்ட உடல்கள், மருத்துவமனைக்கு வெளியிலேயே தரையில் வைக்கப்பட்டதைக் காட்டும் காணொளி, இணையத்தில் தற்போது பரவிவருகிறது.
அத்துடன், போதுமான வேன்களும் அவசர மருத்துவ வாகனங்களும் இல்லாததால், சிலரின் உடல்கள் லாரிகளிலும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறை உயரதிகாரிகளின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

