தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்: 200 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

1 mins read
6d5081ce-df40-4351-8c76-da0b994b8bb7
கோப்புப் படம் - ஊடகம்

பெங்களூரு: பொதுமக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டும். ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய விதத்தில் விற்பனையாகும் உணவுப் பொருள்களை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அறிவுறுத்தி உள்ளார்.

கர்நாடகா மாநிலம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலும் விற்பனையாகும் 200க்கும் மேற்பட்ட பானி பூரி மாதிரிகளைச் சேகரித்து கர்நாடக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், பல மாதிரிகள் சோதனைகளில் தோல்வியடைந்துள்ளன.

மேலும், புற்றுநோய் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் அதில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பானி பூரி உணவுப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பானி பூரியின் தரம் குறித்து மேலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆய்வின் முடிவில், பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பொதுமக்கள் தங்களின் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றும் தூய்மை, சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழகத்திலும் பானி பூரி விற்கப்படும் உணவகங்களில் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 50க்கும் மேற்பட்ட பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கி உள்ளனர். இங்குள்ள பெரும்பாலான கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்