இந்தியாவில் 2011 - 2012ம் ஆண்டு 21 விழுக்காடாக இருந்த வறுமை நிலை 2022- 24ல் 8.5 விழுக்காடாக குறைந்துள்ளது

இந்தியாவில் வறுமை நிலை பெரிய அளவில் குறைந்தது

2 mins read
d6a66ce7-5c14-40d8-8612-b39d42cf159f
ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யும் பெண்கள். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியாவில் வறுமைநிலை பெரிய அளவில் குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2011 - 2012ம் ஆண்டு 21 விழுக்காடாக இருந்த வறுமை நிலை 2022- 24ல் 8.5 விழுக்காடாக குறைந்து உள்ளதாக ‘மாறிவரும் சமூகத்தில் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை மறுஆய்வு செய்தல்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை குறிப்பிட்டது.

என்சிஏஇஆர் என்ற அறிவு சார்ந்த பொருளியல் அமைப்பின் சோனால்டே தேசாய் தலைமையில் இடம்பெற்ற அந்த ஆய்வு, இந்திய மனித மேம்பாட்டு ஆய்வின், அண்மைய 3வது கட்ட ஆய்வின் தரவுகள் மற்றும் முன்னைய முதல், இரண்டாம் கட்ட ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது

“இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு அடிப்படையில், இந்தியாவில் வறுமை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2004 - 2005ல் 38.6 விழுக்காடாக இருந்த வறுமை நிலை, 2011- 12ல் 21.2 விழுக்காடாக குறைந்தது. கொவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் 2022- 2024ல் மேலும் குறைந்து 8.5 விழுக்காடாக ஆகியுள்ளது.

பொருளியல் வளர்ச்சி காலகட்டத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும்போது நீண்ட காலமாக இருக்கும் வறுமை நிலை குறையக்கூடும். இயற்கைப் பேரழிவுகள், நோய், இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கை விபத்துக்கள், தொழில் சார்ந்த வாய்ப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானவையாக ஆகலாம்.

வறுமையில் இருக்கும் மக்கள் பொருளாதாரத்தில் உயர்வதற்காக வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருவதால் வறுமை நிலை கணிசமாக குறைந்துள்ளது என்று அறிக்கை கூறியது.

புள்ளிவிவரம் திட்ட அமலாக்க அமைச்சின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட்ட வீட்டு செலவினம் குறித்த தரவுகளின்படி, 2011-12ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தனிநபர் மாதாந்திர குடும்ப செலவினம் 2022-23ல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

வறுமைக்கோட்டின் அளவு திட்ட ஆணையத்தால் 2011-12ல் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு ரூ 860 மற்றும் ரூ 1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

“பொருளியல் வளர்ச்சி, வறுமை நிலை குறைவு ஆகியவை விரைவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும் சூழலை உருவாக்குகின்றன,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சமத்துவமான வளர்ச்சியை நோக்கிப் பாடுபடும் இந்தியாவுக்கு சமூக மாற்றத்தின் வேகத்துடன் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை உறுதி செய்வது முக்கிய சவாலாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்