லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரசில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகர் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலே பாலா காவல்துறையினரிடம் இருந்து ஒளிந்துகொள்ளவில்லை என்று அவரது வழக்கறிஞர் வியாழக்கிழமை (ஜூலை 4) அவரது இருப்பிடத்தை வெளியிடாமல் கூறியுள்ளார்.
ஹாத்ரஸ் அருகே ஜூலை 2ஆம் தேதி அன்று போலே பாபாவின் பிரசங்கத்தைக் கேட்க வந்த 250,000 பக்தர்கள் வெளியேறும் அவசரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் உயிரிழந்த 121 பேரில் பெரும்பாலோர் பெண்கள்.
ஆன்மீகத் தலைவராக மாறிய முன்னாள் காவல்துறை அதிகாரியான போலே பாபா, சம்பவத்திற்கு பின் தலைமறைவாகிவிட்டார். உள்ளூர் ஊடக அறிக்கைகள் அவர் தனது அருகிலுள்ள மடத்தில் இருக்கக்கூடும் என தெரிவித்தன. யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு அதன் கதவுகள் சங்கிலியால் கட்டி மூடப்பட்டிருந்தன.
121 உயிர்கள் பலியான ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என்றும் அவர் தப்பியோடவில்லை என்றும் போலே பாபாவின் வழக்கறிஞர் திரு ஏ.பி. சிங் கூறினார்.
“அவர் ஒளிந்துகொள்ள எந்தக் காரணமும் இல்லை. அவர் சட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்.” என்றார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஏ.பி.சிங். மூத்த வழக்கறிஞரான இவர், டெல்லியின் நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிட்டவர்.
கூட்ட நெரிசலுக்கு “சமூக விரோதிகள்” காரணம் என்றும், பேரழிவு குறித்த காவல்துறை விசாரணையில் போலே பாபா பங்கேற்பார் என்றும் அவர் கூறினார்.
“இந்த வழக்கில் முழு ஒத்துழைப்புத் தர பாபா தயாராக உள்ளார். இந்தப் பிரச்சினைக்கு முழுமையான விசாரணை அவசியம் என்பது அவரது கருத்து.” என ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
முதல்முறையாக சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள போலே பாபா, பலியானோரின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற கடவுளை வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.
பிரார்த்தனை முடிந்ததும் அங்கிருந்து வெளியேறி விட்டதால் என்ன நடந்தது என தமக்குத் தெரியாது என்றும் சமூகவிரோதிகள்தான் அந்த நெரிசல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவின் முகல்கடி கிராமத்தில் ஜுலை 2ஆம் தேதி நடைபெற்ற பாபாவின் கூட்டத்தில் பாபாவின் பாதங்களை வணங்க பக்தர்கள் முயன்றனர். பாபா முதல் ஆளாகக் கிளம்பிவிட்டதால், மண்ணில் பதிந்த பாபா பயணித்த வாகனத்தின் டயர் சுவடுகளை வணங்க முயற்சித்தனர். இதனைத் தடுத்து பாபாவின் தனிப் பாதுகாவலர்கள் பக்தர்களைத் தள்ளிவிட்டதால் நெரிசல் உருவாகி உள்ளது.
சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சியின் முக்கிய அமைப்பாளரான தேவ் பிரகாஷ் மதுக்கர், மற்றும் சிலர் மீது சிக்கந்தராராவ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. இதில், பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது குறித்து காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூரியில் அமைந்துள்ள போலே பாபாவின் ஆசிரமத்தில் காவல்துறையினர் வியாழக்கிழமை (ஜூலை 4) சோதனை செய்துள்ளனர்.
சோதனைக்குப் பிறகு, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுனில் குமார் கூறுகையில், ஆசிரமம் முழுக்க சோதனை செய்யப்பட்டுவிட்டது. அதில் போலே பாபா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஏறக்குறைய 40 - 50 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். நேற்றும் ஆசிரமத்துக்கு பாபா வரவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், ஆசிரமத்தை சுற்றி காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
போலே பாபா
உத்தரப்பிரதேச காவல்துறையில் காவலராக பணியாற்றிய போலே பாபாவின் இயற்பெயர் சூரஜ்பால் ஜாதவ். அவர், 28 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர். பிறகு, நீதிமன்றத்தை நாடி காவல்துறையில் மீண்டும் இணைந்துள்ளார். ஆனால் 2002ம் ஆண்டு ஆக்ராவில் பணியாற்றிக்கொண்டிருந்த சூரஜ்பால் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் தனது கிராமமான பஹதூர்பூரில் தங்கியிருந்த சூரஜ்பால், கடவுளிடம் பேச ஆரம்பித்ததாக கூறினார். பின்பு அவர் போலே பாபாவாக தன்னை மாற்றிக்கொண்டார்.
பெரிய அளவில் மத சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.
75 வயதான சூரஜ்பாலுக்கு மூன்று சகோதரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சூரஜ்பால் தன்னுடைய பக்தர்கள் உட்பட யாரிடமும் நன்கொடைகள் வாங்குவதில்லை. இருப்பினும் அவர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்தி வருகிறார்.
உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு சொந்தமான நிலத்தில் ஆசிரமங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

