லக்னோ: அயோத்தி ராமர் கோயிலில், அர்ச்சகர்கள் அனைவரும் காவி நிறத்தில் மேலாடை, தலைப்பாகை, வேட்டி அணிந்திருந்தனர். தற்போது ராமர் கோயிலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், முதல் மாற்றமாக அர்ச்சர்கள் உடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கருவறையில் கடவுளுக்குச் சேவை செய்யும் அர்ச்சகர்கள், பழம்பெரும் கலாசாரத்தைப் பின்பற்றி இனி மஞ்சள் (பீதாம்பரி) நிற உடையை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரத்தின் அறக்கட்டளை நிர்வாகம், உடை குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், அர்ச்சகர்கள் இதுவரை அணிந்து வந்த காவி உடை மாற்றப்பட்டு மஞ்சள் நிற உடை அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, காவி நிறத்தில் அர்ச்சகர்கள் சௌபந்தி எனப்படும் மேலாடை, வேட்டி, தலைப்பாகை அணிந்திருந்தனர். தலையில் கட்டப்படும் தலைப்பாகை துணி பருத்தியால் ஆனதாக இருக்கும். அது மட்டுமல்ல, தலைப்பாகையை மிக நேர்த்தியாகக் கட்டுவதற்கு, அர்ச்சகர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனாதன தர்மத்தைப் பின்பற்றி, ராமர் கோயிலில் உதவி அர்ச்சகர்கள் அனைவரும், தலை முதல் கணுக்கால் வரை ஆடை அணிந்திருக்க வேண்டும். இதுவரை சில உதவி அர்ச்சகர்கள் மட்டுமே மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தனர். ஆனால், இனி ஒட்டுமொத்த அர்ச்சகர்கள் குழுவும், பீதாம்பரி நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலின் கருவறைக்குள் இருக்கும்போது, அர்ச்சகர்கள், கைப்பேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இதுபோன்ற தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட்டதில்லை. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோயிலின் கருவறையில் இருக்கும் அர்ச்சகர்கள், கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவது அவசியமாகிறது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கோயிலின் கருவறையில் மழை நீர் கசிவது தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோயிலின் கருவறைக்குள் சேவை செய்யும் அர்ச்சகர்களின் அமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை, கோயிலின் கருவறைக்குள், ஒரு மூத்த அர்ச்சகர் மற்றும் அவருக்கு உதவியாக நான்கு உதவி அர்ச்சகர்கள் என ஐந்து பேர் கொண்ட குழு இருக்கும். ஆனால், தற்போது, மூத்த அர்ச்சகர் மற்றும் நான்கு உதவி அர்ச்சகர்களுடன், ஐந்து பயிற்சி அர்ச்சகர்களும் இருப்பார்கள். கோயிலின் கருவறையில் அதிகாலை 3.30 மணி முதல் இரவு 11 மணி வரை அர்ச்சகர்கள் சேவை செய்வார்கள்.

