கெஜ்ரிவால் பிணை மனு: சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

2 mins read
bb9ea576-c733-4708-b0a2-59433c206300
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப்படம்: ஐஏஎன்ஸ்

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் மத்திய அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ஆம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட இந்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. அதையடுத்து, அதே வழக்கில் மத்திய புலனாய்வுத்துறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியது.

இந்நிலையில், சிபிஐ கைது செய்த வழக்கில் இருந்து பிணையில் விடுவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன் வெள்ளிக்கிழமை (5.7.24) விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “கெஜ்ரிவால் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லக்கூடியவர் அல்ல, அவர் ஒரு பயங்கரவாதியும் அல்ல. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் பிணை பெற்ற பிறகு அவரை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது சரியல்ல என்று வாதாடினார். அதையடுத்து, அந்தப் பிணை மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய புலனாய்வுத் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத்துறை தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் டிபி சிங், முதலில் பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் கெஜ்ரிவால் நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகியதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனு குறித்து பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு வரும் 17ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்