குல்காம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேவேளையில் இரண்டு இந்திய ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், “சனிக்கிழமையன்று குல்காம் மாவட்டத்தில் இரண்டு தனித்தனி என்கவுன்டர்கள் வெடித்தன.
“மோடர்காம் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே முதல் என்கவுன்டர் நடந்தது.
“அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பிறகு ஃப்ரிசல் சின்னிகம் பகுதியில் மற்றொரு என்கவுன்டர் வெடித்தது.
“குல்காம் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த என்கவுன்டர்களில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், இரண்டு இந்திய ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளை களையெடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன,” என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஜூன் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தின் கந்தோ, பதேர்வா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஏடிஜிபி ஆனந்த் ஜெயின் தெரிவித்தார்.

