ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் மாவட்டத்தில் மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து தியோகர் மாவட்ட ஆட்சியர் விஷால் சாகர் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தியோகரில் மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தது.
“சம்பவம் நடந்த இடத்திலிருந்து நால்வர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
“தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
“முதற்கட்ட தகவல்களின்படி, கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதே எங்களின் முக்கிய நோக்கம்.
“அவசர சிகிச்சை வாகனங்களும் மருத்துவர்களும் சம்பவ இடத்தில் தயார் நிலையில் இருக்கின்றனர்,” என்று தெரிவித்தார்.
தியோகர் பகுதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ரித்விக் ஸ்ரீவஸ்தவா பிடிஐ ஊடகத்திடம் கூறுகையில், “இதுவரை நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. மீட்புப் பணி நடந்து வருகிறது,” என்றார். மீட்கப்பட்டவர்கள் தியோகர் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஆய்வாளர் ரந்தீர் குமார் தெரிவித்தார்.

