தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவலர்களால் தீர்க்கமுடியாத பஞ்சாயத்தை தீர்த்து வைத்த எருமை

2 mins read
21331d03-7d91-4520-ab0d-03fbf8e817b6
பஞ்சாயத்தை தீர்த்து வைத்த எருமை. - படம்: ஊடகம்

லக்னோ: ஒரு எருமை மாட்டுக்கு இருவர் சொந்தம் கொண்டாடிய சம்பவம் உத்தரப்பிரதேச மாநில மக்களிடம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அஷ்கரன்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார் நந்தலால். விவசாயியான இவர், சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் மேய்ச்சலுக்குச் சென்ற இவரது எருமை மாடு ஒன்று வீடு திரும்பாததால், கடந்த மூன்று நாள்களாக மாட்டைத் தேடி அலைந்தவர், கடைசியாக பக்கத்து கிராமமான புரேரி ஹரிகேஷில் தனது எருமை மாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

மாடு கிடைத்த மகிழ்ச்சியில் தனது மாட்டை அழைத்துக்கொண்டு செல்ல முயன்றார்.

அப்போது, ஹனுமான் சரோஜ் என்பவர் அந்த எருமை மாடு தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி மாட்டைத் தர மறுத்துள்ளார்.

இதையடுத்து, ஹனுமான் சரோஜ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார் நந்தலால்.

இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்த காவலர்கள், என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினர். இருவருமே மாடு தன்னுடையது என்று கூறியதால் இதற்குத் தீர்வு காண காவலர்கள் புதிய திட்டம் ஒன்றைக் கையாண்டனர்.

இருவரையும் வரவழைத்து அவரவர்களது கிராமத்திற்குச் செல்லும் பாதையில் நிறுத்தினர்.

எருமை மாடு யார் பின்னால் வருகிறதோ அவரே மாட்டின் உரிமையாளர் எனக் கூறி மாட்டை சாலை நடுவே அவிழ்த்து விட்டார்கள்.

அந்த எருமை மாடு நந்தலால் பின்னால் சென்றது. எனவே மாடு அவருக்கே சொந்தம் என மாட்டை அவருடன் அனுப்பி வைத்தனர்.

ஒருவழியாக இந்த பஞ்சாயத்து சுமுகமாக முடிந்ததால் காவலர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

குறிப்புச் சொற்கள்
எருமைமாடுகாவலர்கள்