தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

6 மணி நேரத்தில் 300 மிமீ மழைப் பதிவு: முடங்கியது மும்பை

2 mins read
083dca69-2976-4659-a023-20159a044494
கடும் மழையால் வெள்ளநீர் தேங்கியுள்ள சாலைகளில் ஜூலை 8ஆம் தேதியன்று வாகனங்களும் மக்களும் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

மும்பை: மும்பையில் அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை நகரில் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை தானே பகுதியில் கடந்த சனிக்கிழமை முதலே கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இடைவிடாத மழையால் மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை பேருந்து சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் பொது மக்கள் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வரும் 10ஆம் தேதி வரை மழை தொடர்ந்து பெய்யும். குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் ஜூலை 8 கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழை காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஆறுகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக அப்பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது.

இதன் விளைவாக 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கி ஆறு காண்டாமிருகங்கள் மாண்டதாக அதிகாரிகள் ஜூலை 7ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்