புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்கள் ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரேன் மீது படையெடுத்ததற்குப் பின் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
அங்கு இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தியா - ரஷ்யா உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்வார். அந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புட்டினும் இந்தியப் பிரதமர் மோடியும் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பலதுறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்து ஆலோசிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வட்டாரம் மற்றும் உலக நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அந்த மாநாட்டில் பேசப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு கடந்த வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய - ரஷ்ய உச்சநிலை மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் டெல்லியில் உச்ச நிலை மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பங்கேற்றார். பின்னர் 2022, 2023ஆம் ஆண்டுகளில் அந்த மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 22வது இந்திய, ரஷ்ய உச்ச நிலை மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது..
ரஷ்ய அதிபர் புட்டின் அளிக்கும் சிறப்பு மதிய விருந்தில் கலந்துகொண்ட பின் பிரதமர் மோடி, ரஷ்யாவில் வாழும் இந்தியர்களைச் சந்திக்க இருப்பதாகவும் அங்குள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என்றும் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஆஸ்திரியா செல்லவிருக்கிறார்.

