புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் ரஷ்யப் பயணத்தை முடித்துக்கொண்டு, இப்போது ஆஸ்திரியா சென்று சேர்ந்துள்ளார். ஆஸ்திரியா விமான நிலையத்தில் இந்தியப் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். கடைசியாக இந்திரா காந்தி 1983ஆம் ஆண்டில் பயணம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியப் பிரதமர் கார்ல் நெகம்மாரை இந்திய பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு நாட்டுத் தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர்.
பின்னர், மோடியுடன் கார்ல் நெகம்மர் ‘செல்பி’ எடுத்துக் கொண்டார். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரியா அதிபர் அலெக்ஸாண்டர் வான் டிர் பெல்லனை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்துப் பேசவிருக்கின்றனர்.
இந்தியா - ஆஸ்திரியா நாடுகளுக்கு இடையே 75 ஆண்டுகளாக நல்லுறவு நிலவி வருகிறது. 1947இல் இந்தியாவின் சுதந்திரத்தை ஆஸ்திரியா அங்கீகரித்தது. இரு நாடுகளும் 1949இல் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்தின. அதன் மூலம் தூதரகங்களும் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், ஆஸ்திரியப் பிரதமர் கார்ல் நெகம்மர், இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் மோடியை வியன்னாவுக்கு வரவேற்பதாகவும், ஆஸ்திரியாவும் இந்தியாவும் நல்ல நண்பர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“ஆஸ்திரியாவும் இந்தியாவும் தங்கள் உறவை மேலும் ஆழப்படுத்துவதோடு பல புவிசார் அரசியல் சவால்களில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பற்றி பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரியப் பிரதமர் நெகம்மருக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி, “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஆஸ்திரியாவுக்கு நான் வந்திருப்பது பெருமைக்குரியது.
தொடர்புடைய செய்திகள்
“நமது இரு நாடுகளுக்கும் இடையே பிணைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் புதிய வழிகளை ஆராய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று எதிர்பார்க்கிறேன்,” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், “ஆஸ்திரியா அதன் துடிப்பான இசைக் கலாசாரத்திற்குப் பெயர் பெற்றது. வந்தே மாதரம் பாடலை அவர்கள் இசைப்பதைப் பார்க்கும்போது, அதை உணர முடிந்தது,” எனப் பாராட்டியுள்ளார்.
முதல் முறையாக 2017ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்றபோது, ஆஸ்திரியா அதிபர் கிறிஸ்டியன் கெர்னுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரியா இருதரப்பு வர்த்தகம் சீராக வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு இயந்திரங்கள், வாகன பாகங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றை ஆஸ்திரியா ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆஸ்திரியா ஆதரித்துள்ளது.
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளில் இரு நாடுகளுமே ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பை தந்து நட்புறவை ஆழமாக்கி வருகின்றன.