லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் புதன்கிழமை (ஜூலை 10) நிகழ்ந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
உன்னாவ் மாவட்டம் பெஹ்தா முஜாவர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில், ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் அதிகாலை 5 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி படுக்கை வசதி கொண்ட சொகுசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது.
காதா கிராமம் அருகே விரைவுச் சாலையில் பால் ஏற்றிய லாரி ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது அப்பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது.
அதன் விளைவாக பேருந்தில் இருந்த பயணிகள் வெளியே தூக்கி வீசப்பட்டனர். பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 19 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர். உயிரிழந்தோரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினரும் அவசரகாலப் பணியாளர்களும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பேருந்து வேகமாகச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து வெளியான காணொளிக் காட்சிகளில் சாலைகளில் மாண்டோரின் உடல்கள், நொறுங்கிய பேருந்து பாகங்கள், கண்ணாடித் துண்டுகள் போன்றவை சிதறி கிடப்பதைக் காணமுடிந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதிபர் திரௌபதி முர்முவும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.