இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ரஷ்யப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பி உள்ள வேளையில், இந்திய-ரஷ்ய உறவு குறித்து அமெரிக்க தற்காப்பு அமைச்சு இரண்டாவது நாளாக கவலை தெரிவித்து உள்ளது.
ரஷ்ய-இந்திய உறவு குறித்து நாங்கள் தங்கள் கவலைகளை ஏற்கெனவே தெரிவித்து உள்ளோம் என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் மேத்யூ மில்லர் கூறி உள்ளார்.
அன்றாட செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், “ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருக்கும் நட்பு குறித்து எங்களது கவலைகளை மிகவும் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்.
“இந்திய அரசாங்கத்துடன் தனிப்பட்ட முறையில் நேரடியாக அதனைத் தெரிவித்துள்ளோம். தொடர்ந்து எங்களது கவலைகளை இந்தியாவிடம் வெளிப்படுத்துவோம். எங்களது இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை,” என்றார் அவர்.
அண்மையில் இந்தப் பிரச்சினையை அமெரிக்கா எழுப்பியதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கடந்த 24 மணி நேரத்தில்கூட இந்தியாவிடம் பேசியுள்ளோம்,” என்று அவர் பதிலளித்தார்.
உக்ரேனில் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை ஐநா சாசனத்துக்கு உட்பட்டு ஆதரிக்க வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திரு மில்லர், இந்தியா, அமெரிக்காவின் உத்திபூர்வ பங்காளி என்றும் அதனுடன் முழுமையான, வெளிப்படையான உரையாடலை தாங்கள் நடத்துவோம் என்றும் கூறியிருந்தார்.
“எங்களது உரையாடலில் ரஷ்யாவுடன் இந்தியா வைத்திருக்கும் உறவு தொடர்பான எங்களது கவலைகளும் இடம்பெற்று இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா-ரஷ்யா இடையிலான 22வது வருடாந்தர உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்யா-உக்ரேன் இடையே போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி ரஷ்யா சென்றது இதுவே முதல் முறை.
மாஸ்கோவில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் திரு மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சந்தித்துப் பேசினர்.