கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

2 mins read
6cc0d6d0-1481-410d-9c68-7a03473028b5
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: புதுடெல்லி மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஏறக்குறைய ரூ.2,800 கோடி ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையிலான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தன்னைக் கைது செய்தது தவறு என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ஜூலை 12ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கி தீர்ப்பளித்தனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இந்த வழக்கு விசாரணை தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஒன்பது முறை நேரில் முன்னிலையாக கடிதம் அனுப்பியும், அவர் முன்னிலையாகவில்லை. அமலாக்கத் துறையின் பல்வேறு அழைப்பாணைகளை நிராகரித்த பின்னர், கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனம் செய்பவரும் ஊழலுக்கு எதிராக முழுமூச்சாகப் போராடியவருமான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தான் எவ்விதக் குற்றமும் செய்யவில்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கெஜ்ரிவால், அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை வழங்கியது.

அதன்படி, தீர்ப்பின்போது நீதிபதிகள், “90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் துயரப்பட்டிருக்கிறார்.

“பிணையில் ஒருவர் வெளியில் வருவதற்கும், அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பிணை கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். பிணையில் அவர் வெளியில் வந்தவுடன் தேவை ஏற்பட்டால் அமலாக்கத் துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்ளலாம்.

“வெறும் விசாரணைக்காக மட்டும் குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்.

“மேலும் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வர். அவருக்கென்று சில உரிமைகள் உள்ளன. அப்படிப்பட்டவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்குகிறோம்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்