மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உப்புமாவில் பல்லி: மத்திய அரசு நடவடிக்கை

மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உப்புமாவில் பல்லி: மத்திய அரசு நடவடிக்கை

2 mins read
793b11e5-c440-4782-a949-c6d502f0c817
கோப்புப் படம் - ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா ‘மாடல்’ பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உப்புமாவில் பல்லி விழுந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இந்திய அரசின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை வெள்ளிக்கிழமை கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள அரசுப் பெண்கள் பள்ளி விடுதி மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

காலை உணவைச் சாப்பிட்ட 17 மாணவிகள் ராமயம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இரண்டு மாணவிகள் வேறு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

மீதமுள்ள 15 மாணவிகள் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பினர்.

உப்புமாவில் பல்லி விழுந்து கிடந்தது தொடர்பில், குற்றம்சாட்டப்பட்ட சமையல்காரரும் உதவி சமையல்காரரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அதேசமயத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் பெண்கள் விடுதிக் காப்பாளரையும் சிறப்பு அதிகாரியையும் சுகாதாரமற்ற முறையில் உணவைச் சமைத்து விநியோகித்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மேடக் மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, மேடக் மாவட்டத்தில் உள்ள அரசுப் பெண்கள் பள்ளி விடுதியில் 9 மாணவிகளை எலி கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

9ஆம் வகுப்பு மாணவர்கள் செவ்வாய், புதன்கிழமை இரவு விடுதியின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது எலிகள் கடித்துவிட்டதாக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். அவர்கள் ராமயம்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று விடுதிக்குத் திரும்பினர்.

குறிப்புச் சொற்கள்