அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் ஏறக்குறைய 40 வேலைகளைப் பெற நூற்றுக்கணக்கானோர் நேர்காணலுக்குக் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருசிலர் கீழே விழுந்தனர்.
அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைப் போலவே வேலைவாய்ப்புக்காக திரண்ட இளையர்களிடையே கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுமக்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என ஆளும் பாஜகவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் சாடியுள்ளது.
பருச் மாவட்டம், அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள தெர்மாக்ஸ் என்ற தனியார் நிறுவனம், லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை 40 வேலைகளுக்கு நேர்காணலை நடத்தியது. இதற்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
ஹோட்டலின் நுழைவுவாயிலின் இரு பகுதியிலும் இருந்து நெருக்கியடித்துக்கொண்டு இளையர்கள் உள்ளே புகுந்தனர். பலர் கதவுக்கு வெளியே ஒருவரையொருவர் முட்டி மோதியபடி நின்றனர்.
நெரிசல் காரணமாக நுழைவாயிலில் இருந்த இரும்புத் தடுப்பு ஒன்று இடிந்து விழுந்து பலர் கீழே விழுந்தனர். சிலர் தரையில் குதித்தனர். ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், கோப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு வரிசையில் காத்திருப்பதும் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்வதும் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் நடந்த ஆள்சேர்ப்புப் பணியில் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டதாக அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

