பீகாரில் மின்னல் தாக்கியதில் 24 மணி நேரத்தில் 25 பேர் பலி, 39 பேர் காயம்

1 mins read
25294978-22b9-452f-a799-a17f53ed1f8b
படம் - பிக்சாபே

பாட்னா: கடந்த 24 மணி நேரத்தில் பீகாரின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 25 பேர் உயிரிழந்தனர், 39 பேர் காயமடைந்துள்ளனர்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இடியுடன் கூடிய மழையின்போது மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

உயிரிழந்த 25 பேரில் மதுபானியில் ஐவரும் ஔரங்காபாத்தில் நால்வரும் சுபாலில் மூவரும் நாலந்தாவில் மூவரும் லக்கிசராய் மற்றும் பாட்னாவில் தலா இருவரும் பெகுசராய், ஜமுய், கோபால்கஞ்ச், ரோஹ்தாஸ், சமஸ்திபூர், பூர்னியாவில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் மின்னல் தாக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும், அதிகாரபூர்வமற்ற எண்ணிக்கை அதைவிடவும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாட்னா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அத்துடன், கிஷன்கஞ்ச், அராரியா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வியாழனன்று, தங்களது வகுப்பறைக்கு அருகில் இருந்த பனை மரத்தில் மின்னல் தாக்கியதை அடுத்து பர்கா காவ்ன் கிராமத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் மேலும் 17 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்