ஆடவரை 40 நாள்களில் ஏழு முறை கடித்த பாம்பு!

1 mins read
f7b9ce0a-e609-418d-8645-828547b3d276
விகாஸைத் தொடர்ந்து 40 நாள்களுக்கு ஏழு முறை பாம்பு கடித்திருப்பது கற்பனை செய்ய முடியாத அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.  - படம்: பிக்சாபே

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபதேஹ்பூர் பகுதியைச் சேர்ந்த விகாஸ் தூபே என்ற 24 வயது ஆடவரை, கடந்த 40 நாள்களில் ஏழு முறை பாம்பு கடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பாம்புக் கடிக்கு உள்ளானதால், மருத்துவச் செலவுகளுக்குச் சிரமப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்தை நாடியிருக்கிறார் விகாஸ்.

அதன் காரணமாக, அவரைப் பற்றிய செய்திகள் பரவலாயின.

தொடர்ந்து 40 நாள்களுக்கு ஏழு முறை விகாஸை பாம்பு கடித்திருப்பது கற்பனை செய்ய முடியாத அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற விகாஸ், கண்ணீர் விட்டு அதிகாரியிடம் அழுததாகத் தெரிவிக்கப்பட்டது.

பாம்புக் கடிக்கு சிகிச்சை பெற நிறைய பணம் செலவிட்டதாகவும், தமக்கு உதவும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

அங்கிருந்த அதிகாரிகள் பாம்புக் கடிக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அங்குச் செல்லும்படியும் விகாஸுக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாம்பு தம்மை ஒவ்வொரு சனிக்கிழமை மட்டுமே கடிப்பதாக விகாஸ் கூறியிருக்கிறார்.

தாம் தொடர்ந்து ஒரே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அடுத்த நாளே குணமடைந்து வீடு திரும்பிவிடுவதாக அவர் சொன்னார்.

இந்தச் செய்தி மிகவும் விநோதமாக உள்ளதால், அதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்காக மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்