ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம்

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம்

2 mins read
8094fd5e-2261-4d58-ba35-b6cb608a0f6b
ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் அவசரப் பிரிவு காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்ட காட்சி. - கோப்புப் படம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மத்திய உள்துறை அமைச்சு விதிகளைத் திருத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு இருக்கும் நிர்வாக அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சு விதிகளைத் திருத்தி உள்ளது. காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்தியப் பணியாளர்கள் தொடர்புடைய விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் நியமனம் மற்றும் இடமாறுதல் தொடர்பான அதிகாரமும் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதித்துறையின் ஒப்புதலைப் பெறுவது அவசியம்.

தலைமை வழக்கறிஞர் நியமனம், சட்ட அதிகாரிகள் நியமனம், வழக்கு தொடர அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது அல்லது மேல்முறையீடு செய்வது தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் அவசியமாக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019ன் பிரிவு 55ன் கீழ் திருத்தப்பட்ட விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. பிரிவு 55 என்பது, ஆளுநரின் அதிகாரம் பற்றியது. இந்த பிரிவில்தான் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதோடு, ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர், ஜூன் 2018 முதல் மத்திய ஆட்சியின் கீழ் உள்ளது. செப்டம்பர் 30, 2024க்கு முன் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்குத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜம்மு காஷ்மீர்உள்துறை அமைச்சுமறுசீரமைப்பு