ஜலான்: உத்தரப் பிரதேசத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் அஸ்வதி. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவரான இவர் மீது, வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் தோள் பட்டையில் குண்டு துளைத்த காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா, ‘‘விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவர் பாஸ்கர் அஸ்வதி, தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
“வெள்ளிக்கிழமை இரவு இருட்டிய நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக அவர் ஓராய் பகுதியிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி கொடுத்த மருத்துவர்கள், கான்பூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் பாஸ்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“பாஸ்கரின் குடும்பத்தினர் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என அவர் குறிப்பிட்டார்.

