தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் பங்குச் சந்தைக்கு மெருகூட்டும் இளம் முதலீட்டாளர்கள்

2 mins read
ac16106c-9396-432d-85bc-e55f15de4a33
முதலீடு செய்து அதில் வந்த லாபத்தின் மூலம் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்ட முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைமசிடம் கூறினார் தேவ‌ஷி‌ஷ் டேய், 24. - படம்: தேவ‌ஷி‌ஷ் டேய்
multi-img1 of 3

பெங்களுரூ: இந்தியாவில் முதலீடுகள் மூலம் மேம்பட்ட லாபத்தை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது; வேலை செய்யும் இளையர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பலர் திரளாக அந்நாட்டுப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாத்துக்கும் இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தனிநபர்களின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் மேல் ஆனது. 36 மில்லியனாக இருந்த எண்ணிக்கை 160 மில்லியனுக்குக் கூடியது.

கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய முதலீட்டாளர்களில் 83 விழுக்காட்டினர் சம்பாதிக்கக்கூடிய வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று மும்பை பங்குச் சந்தையின் தலைமை நிர்வாகி சுந்தரராமன் ராமமூர்த்தி தெரிவித்திருந்தார். 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிர்வாகக் கூட்டம் ஒன்றில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

புதிய முதலீட்டாளர்களில் 14 விழுக்காட்டினர் 18லிருந்து 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 22 விழுக்காட்டினர் 20லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சில்லறை விற்பனை வர்த்தகத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பங்குச் சந்தை பெரும் வளர்ச்சி கண்டதற்கு முக்கியக் காரணம்.

இதனை உள்ளூர் முதலீட்டு முகவர் நிறுவனமான மொட்டிலால் ஒஸ்வால் இம்மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அதனால் உள்ளூரில் நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் மும்பையில் இயங்கும் கெஜ்ரிவால் ரிசர்ச் எனும் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர் அருண் கெஜ்ரிவால் சொன்னார்.

இவ்வாண்டு மார்ச் மாத நிலவரப்படி நிறுவன உரிமையாளர்களாக இருக்கும் இந்தியர்களின் விகிதம் 63 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த விகிதம் 55 விழுக்காடாகவும் 2019 மார்ச்சில் 59 விழுக்காடாகவும் இருந்தது.

குறிப்புச் சொற்கள்