அமராவதி: ஆந்திர மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சுதந்திர தின விழா முதல் அண்ணா உணவகங்கள் பல திறக்கப்படும் என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் நிம்மல ராமாநாயுடு தெரிவித்துள்ளார்.
அமராவதியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஆந்திராவில் ஏறக்குறைய 153 இடங்களில் அண்ணா உணவகங்கள் திறக்கப்படும். அதேபோல், ‘தாய்க்கு வந்தனம்’ திட்டத்தின்கீழ் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களின் வங்கிக் கணக்குக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் அனுப்பி வைக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அம்மா உணவகங்களைப் போன்று ஆந்திர மாநிலத்தில் கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அண்ணா உணவகங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி அரசு வந்ததும் அண்ணா உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளதை அடுத்து அண்ணா உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

