புதுடெல்லி: தனது பயிற்சியாளரின் உதவியுடன் வான்குடை மூலம் குதித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சாதனை புரிந்துள்ளார்.
உலக ஸ்கை டைவிங் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டதை அடுத்து, ஹரியானாவின் நர்னவுல் விமானப்படைத் தளத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், 53, விமானம் நடுவானில் சென்றபோது வான்குடை மூலம் கீழே குதித்தார்.
தனது பயிற்சியாளரின் உடலுடன் இடைவார் மூலம் தன்னையும் சேர்த்துக் கட்டிக்கொண்டு அமைச்சர் ஷெகாவத் இந்தச் சாதனையைப் புரிந்தார்.
அதே விமானத்திலிருந்து வான்குடை மூலம் குதித்த மற்றொரு பயிற்சியாளர் எடுத்துள்ள இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தரையிறங்கிய அமைச்சர் ஷெகாவத் கூறுகையில், “இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஏரோஸ்போர்ட்ஸ் எனப்படும் வான் சாகச விளையாட்டுகள் மிகவும் உற்சாகம் நிறைந்தவை. இனி ஹரியானாவின் நர்னவுல் விமானப் படைத் தளத்தில் இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளில் சுற்றுலாப் பயணிகளும் ஈடுபடலாம்,” என்றார்.

