புதுடெல்லி: புதுடெல்லியின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கேரளம் மற்றும் வடமாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் புதுடெல்லியில் கடந்த ஒரு வாரமாக மிதமானது முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான பல்வேறு காரணங்களுக்கு 11 பேர் பலியாகினர்.
இந்நிலையில், மழை இந்த வாரம் சற்று ஓய்ந்த நிலையில், மீண்டும் நகரில் ஆங்காங்கே ஒரு சில பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள நீர், வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
புதுடெல்லியில் உள்ள வடக்கு அவென்யூவிலும், சிவில் லைன்ஸில் உள்ள பகுதியிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து, புதுடெல்லி மற்றும் நொய்டாவில் ஜூலை 17ஆம் தேதி வரை லேசான மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வகம் கணித்துள்ளது.
மழையின் காரணமாக, யமுனை ஆற்றின் நீர்மட்டம் வரும் நாள்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நொய்டா கிராமங்களில் வசிப்பவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பருவமழையின்போது இந்தக் கிராமங்கள் கடுமையான வெள்ளத்தைச் சந்தித்தன. இதனால் புதுடெல்லி மற்றும் நொய்டா இரு பகுதிகளில் வசிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.