ஆனந்த்: குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் பேருந்து மீது டிரக் வாகனம் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
ஆனந்த் நகருக்கு அருகேயுள்ள அகமதாபாத்-வதோதரா விரைவுச்சாலையில் வேகமாக வந்த டிரக் வாகனம் ஒன்று, சாலையில் நின்றுகொண்டிருந்த பேருந்தின்மீது திங்கட்கிழமை அதிகாலை மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
ஆனந்த் மாவட்டத்தின் சிகோத்ரா கிராமம் அருகே அதிகாலை 4:30 மணியளவில் அகமதாபாத் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து டயர் வெடித்து சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக ஆனந்த் நகரைச் சேர்ந்த காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பேருந்தின் டயரை மாற்றியபோது பேருந்து பயணிகள் கீழே இறங்கினர். அவர்களில் சிலர் வாகனத்தின் முன்புறம் காத்திருந்தபோது வேகமாக வந்த டிரக் வாகனம், பேருந்தின் பின்புறம் மோதியதாக அதிகாரி கூறினார்.
ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். இறந்தவர்களில் மூன்று பெண்களும் பேருந்து ஓட்டுநரும் அடங்குவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

