8.5 கிலோ எடை குறைந்த கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

8.5 கிலோ எடை குறைந்த கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

1 mins read
50f9353c-a228-4e15-8da9-200460227708
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அழைத்துச் செல்லும் காவலர்கள். - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரது எடை ஏறக்குறைய 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மார்ச் 21ஆம் தேதியன்று அமலாக்கத் துறை கைது செய்தபோது கெஜ்ரிவாலின் எடை 70 கிலோவாக இருந்தது என்றும் தற்போது அவரது எடை 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில் டெல்லி அமைச்சர் அதிஷி பேசியபோது, “பாஜக அரசு சதிசெய்து போலி வழக்கில் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்துள்ளது. நீரிழிவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் உடல்நலம் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. அவரது உடல்எடை 8.5 கிலோ அளவுக்குக் குறைந்துள்ளது.

“அவரது சர்க்கரை அளவும் 50க்கும்கீழ் ஐந்து முறை சென்றுள்ளது. இது கவலைக்குரியதாகும். சரியான முறையில் இதற்குச் சிகிச்சை அளிக்காவிடில் அவருக்குப் பக்கவாதம் அல்லது மூளையில் ரத்தக்கசிவு போன்ற பேராபத்து ஏற்படலாம். இதுதொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அதிஷியின் குற்றச்சாட்டுக்குப் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, கெஜ்ரிவாலின் எடை இரண்டரை கிலோ மட்டுமே குறைந்து இருப்பதாகக் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்