திஸ்புர்: குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளின்படி 2015க்குப் பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுவரை 8 பேர் மட்டுமே குடியுரிமைத் திருத்தச் (சிஏஏ) சட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் இருவர் மட்டுமே அரசின் நேர்காணலில் பங்கேற்றிருப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசியபோது, “2015க்கு முன்பு இந்தியா வந்தவர்களுக்கு சிஏஏ விதிகளின்படி விண்ணப்பிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
“அதேபோல், இந்தியாவுக்குள் வந்தவர்கள் சிஏஏ-யின் கீழ் விண்ணப்பிக்கத் தவறினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், அசாம் மாநிலத்தில் குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து குடியேறி இருப்பதால், சிஏஏ மாநிலத்துக்கு முக்கியமற்றது என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்திருந்தார்.
மேலும், பங்ளாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவுக்குள் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை சிஏஏ சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அசாம் முதல்வர் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்தை தொடர்ந்து, அசாம் மாணவர் சங்கம் மற்றும் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின அமைப்புகள் குவஹாத்தி, லக்கிம்பூர், நல்பாரி, திப்ருகார், தேஜ்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிஏஏ சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

