தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீர் மோதலில் ஒரே வாரத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

2 mins read
aa6e011d-c436-4b13-ac3d-63b0c06e7daf
காஷ்மீரின் ஸ்ரீநகரில் கவச வாகனத்தில் ஆயுதம் ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தினர். - படம்: இபிஏ

காஷ்மீர்: தோடா மாவட்டத்தில் இந்தியப் படையினருக்கும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை இரவு நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவரும் நான்கு வீரர்களும் கொல்லப்பட்டனர்.

தோடா நகரில் இருந்து கிட்டத்தட்ட 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேசா காட்டுப்பகுதியை ஒட்டிய தாரி கோடே என்னும் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு, ராணுவத்தினரும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிக் குழுவினரும் இணைந்து தீவிரவாதிகளைத் துடைத்தொழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதற்கு தீவிரவாதிகள் பதில் தாக்குதல் தொடுத்தனர். அந்தத் தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவரும் நான்கு படைவீரர்களும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் ஐந்து பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவரும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.

ஜம்மு பகுதியில் ஒரு வாரத்திற்குள் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.

அடுத்தடுத்த சம்பவம்

கடந்த வாரம் கதுவா என்னுமிடத்தில் நடந்த மோதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் வேட்டை தொடர்வதாகவும் அதையடுத்து காட்டுப் பகுதிக்குள் கூடுதல் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

விழிப்புநிலையில் ராணுவம்

காஷ்மீர் பகுதியில், தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு ராணுவம் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் மீதான தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்கின்றன.

இப்போது தோடா காட்டுப் பகுதியில் நடந்த தாக்குலுக்கு ‘காஷ்மீர் புலிகள்’ என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று காஷ்மீர் புலிகள் குழு அறிவித்துள்ளது. கதுவாவில் ராணுவ வாகனங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இந்தக் குழுவால்தான் மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

கடந்த 1989ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்திற்கும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீர் பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வது குறைந்து வந்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து எட்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் 33 பேர் படுகாயம் அடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்