ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை; பாஜக தலைவருக்கு சிதம்பரம் கண்டனம்

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை; பாஜக தலைவருக்கு சிதம்பரம் கண்டனம்

2 mins read
c603b41b-64b7-486e-910e-9c67c2fa4b99
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அரசியல் படுகொலைகள் குறித்த பாஜக தலைவர் அமித் மால்வியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் அமித் மால்வியா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டுப் பேசுகையில், காங்கிரஸ் தலைவர்கள் அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கின்றனர்.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் (ஜோ பைடன் தரப்பு) டோனல்ட் டிரம்புக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பதை ஒப்பிட்டு இந்தியாவில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிப்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

“தங்கள் கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதை நினைவுகூறும் காங்கிரஸ், அதற்கு முன், காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் எடுத்த அரசியல் முடிவுகளுக்காகவே கொல்லப்பட்டுள்ளனர் என்பதை காங்கிரஸுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார் அமித் மால்வியா.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், நன்னடத்தை கருதி அமித் மால்வியாவை மோடி உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அரசியல் வன்முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. அமித் மால்வியாவின் கருத்து, அரசியல் படுகொலைகளை நியாயப்படுத்தும் விதமாக உள்ளது.

இதனை வன்மையாகக் கண்டிப்பதாகப் பதிவிட்டுள்ள ப. சிதம்பரம், இதன்மூலம் அவர் கூற வருவது என்ன? ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் பேசியுள்ள மால்வியாவின் கருத்தை பாஜக தலைவர்கள் ஆதரிக்கின்றனரா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி ஆகியோரது படுகொலைகள் பயங்கரவாதச் சித்தாந்தங்களால், பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை.

அரசியல் தீர்மானங்கள் சரியா? தவறா? என்பது அரசியல் விவாதங்கள், ஆலோசனைகள் மூலம் தீர்மானிக்கப்படவும் நிராகரிக்கப்படவும் வேண்டும். படுகொலைகளை அரசியல் தீர்மானத்திற்கானத் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது எனப் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்