எந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தையும் சோதிக்கலாம்: தேர்தல் ஆணையம்

1 mins read
95c1a89c-114c-4d9d-b1fb-20880b0499d8
மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல், அண்மைய சட்டமன்றத் தேர்தல்களில் இரண்டாம் மூன்றாம் இடம்பிடித்து தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றைச் சோதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்தச் சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வேட்பாளர்கள் தங்களின் தொகுதியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட எந்த இவிஎம் இயந்திரங்களைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். எந்த இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்ற வேட்பாளர்களின் முடிவில் அதிகாரிகளின் தலையீடு இருக்காது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி அதிகபட்சமாக 1,400 வாக்குகள் செலுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்தி அவை சரியாக இயங்குகிறதா என்று சோதிக்கலாம். அதிகபட்சமாக வேட்பாளர்கள் தங்களின் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 5 விழுக்காடு இயந்திரங்களைச் சோதிக்க முடியும்.

இவிஎம் இயந்திரமானது பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் (விவிபேட்) யூனிட்டை உள்ளடக்கியது. இந்த யூனிட்டுகளை வெவ்வேறு இயந்திரங்களில் இடைமாற்றியும் (ஓர் இவிஎம் இயந்திரத்தில் உள்ள பேலட் யூனிட்டையும் மற்றோர் இயந்திரத்தில் உள்ள விவிபேட் யூனிட்டையும்) இணைத்து சோதித்துப் பார்க்கலாம்.

ஆனால் ஒரு தொகுதியில் மொத்தம் 5 விழுக்காடு இயந்திரங்களைச் சோதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் ஓர் இவிஎம் இயந்திரத்தை மட்டுமே சோதிக்க முடியும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி விரைவில் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி இவிஎம் இயந்திரங்கள் சோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்