பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற கிட்டத்தட்ட 50 இளம் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து வாழ்வதாக இந்திய உளவுத் துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானிலிருந்து தகவல் வரும்போது, திடீா் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியால் இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் இளைஞர்களாகவும், நவீன கருவிகளுடன் வருவதால் உள்ளூர் மக்களின் உதவியின்றி தாங்களே வாழ்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு, தகவல்களை திரட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பக்கத்திலிருந்து இந்தியாவின் எல்லைக்குள் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக இந்த இளைஞர்கள் நுழையலாம் என்றும் கருதப்படுகிறது. ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச், ரஜெளரி உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. விமானப் படை வாகனம், ஆன்மிக சுற்றுலாப் பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்கள் மற்றும் கதுவாவில் அண்மையில் கொல்லப்பட்ட வீரா்கள் வளா்ந்து வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகின்றன.
பாகிஸ்தானிலிருந்து ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் ‘பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு’ தந்திரத்தைக் கையாள்கிறார்கள்.
இந்தியாவுக்குள் ஊடுருவி சில காலம் வாழ்ந்த பிறகு தாக்குதலில் ஈடுபடுவதற்கான அறிவுறுத்தல்கள் பாகிஸ்தானிலிருந்து கிடைக்கும் வரையில் உள்ளூா் மக்களுடன் இணைந்து இயல்பு வாழ்க்கையை அவா்கள் வாழ்கின்றனா் என்று முன்னதாக தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.
உதாரணமாக கடந்த ஏப்ரலில் சோபோரில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள் சுமாா் 18 மாதங்கள் இந்தியாவில் பதுங்கி இருந்துள்ளனா். அவா்கள் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கும் காஷ்மீா் முழுவதும் உள்ள பயங்கரவாதக் குழுக்களுடன் தொடா்பில் இருந்ததற்கும் சான்றுகள் உள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகளை தவறாக வழிநடத்த ‘அல்ட்ரா செட்’ கைப்பேசிகள் போன்ற பாதுகாக்கப்பட்ட தகவல் தொடா்புக் கருவிகளையும் இணைய செயல்பாட்டையும் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால், தொழில்நுட்ப நுண்ணறிவை மட்டும் நம்பியிருப்பது பலனளிக்காது என்கிறார்கள் அதிகாரிகள்.