சிங்கப்பூரில் உள்ள அனைத்து பிரதான இணையச் சேவை வழங்குநர்கள் தங்கள் நிலையான அகண்ட அலைவரிசை (Broadband) கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை விரைவுபடுத்தியுள்ளன.
இதனால், வர்த்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து இல்லங்களும் 2028ஆம் ஆண்டுக்குள் 10ஜிபிபிஎஸ் (10Gbps) நிலையான அகண்ட அலைவரிசை திட்டங்களால் பயனடைய முடியும். இதனால் இணையத்துடன் இணைக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் தொலைமருத்துவம் போன்ற பயன்பாடுகளின் வரம்புக்கு ஆதரவு கிட்டும்.
இவ்வாண்டு பிப்ரவரியில் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) $100 மில்லியன் மானியம் அறிவித்த பிறகு இந்தப் புதிய திட்டம் அறிமுகமாகிறது.
இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இணையத்துடன் இணைக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், தொலைமருத்துவம், செயற்கை நுண்ணறிவு போன்ற அதிக தரவுகளை சேமிக்கக்கூடிய செயலிகளில் எதிர்பார்க்கப்படும் எழுச்சியை ஆதரிக்கும் கணினி மேம்படுத்தல்களின் விலையைக் குறைக்கலாம்.
சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1, வியூகுவேஸ்ட், மைரிபப்ளிக் ஆகிய எல்லா பிரதான இணையச் சேவை வழங்குநர்களும் தாங்கள் இந்த மானியத்துக்கு விண்ணப்பித்து இருப்பதாகத் தெரிவித்துள்ளன. மானியம் கிடைத்தால் அவை 10Gbps சேவைகளைப் போட்டித்தன்மைமிக்க கட்டணங்களில் வழங்க முடியும்.
“ரவுட்டர்கள் போன்ற புதிய இல்லக் கட்டமைப்பு உபகரணங்களுடன் அதிக போட்டித்தன்மையான, அதிவேக சேவை சலுகைகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்,” என்று ஐஎம்டிஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டில் $750 மில்லியன் அரசாங்க மானியத்துடன் அடுத்த தலைமுறை அகண்ட அலைவரிசை கட்டமைப்பு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, 1Gbps வரை இணைய உலாவல் வேகம் கொண்ட அகண்ட அலைவரிசை திட்டங்களை இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றன.
அகண்ட அலைவரிசை 10Gbpsக்கு மேம்படுத்தப்பட்டதன் மூலம் 2023ல் அறிவிக்கப்பட்ட ‘மின்னிலக்க இணைப்புத் திட்டம்’ என்று அழைக்கப்படும் அடுத்த தலைமுறை அகண்ட அலைவரிசை கட்டமைப்புக்கான தேசிய திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.