இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம்

2 mins read
8bb109f9-2fb3-438d-9933-d873ca067d48
சத்ரபதி சிவாஜி 1659ல் அப்சல் கானைக் கொல்வதற்கு இந்தப் புலி நக ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. - கோப்புப் படம்

மும்பை: முகலாயப் படைத் தளபதி அப்சல் கானைக் கொல்ல சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய ‘வாக் நாக்’ எனப்படும் புலி நக ஆயுதம் லண்டனிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட உள்ளதாக மகாராஷ்டிர மாநிலக் கலாசாரத் துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் அரும்பொருளகத்தில் இருக்கும் சிவாஜி பயன்படுத்திய புலி நக ஆயுதம் ஜூலை 19ஆம் தேதி இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிரத்தின் சதாராவில் உள்ள ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மகாராஜ் அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் விழா நடத்தப்பட்டு அந்த புலி நக ஆயுதம் அரும்பொருளகத்தில் வைக்கப்படவுள்ளது.

கடந்தாண்டு, மகாராஷ்டிர அமைச்சர்கள் சுதிர் முங்கந்திவார், உதய் சமந்த் இருவரும், லண்டன் அரும்பொருளகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிவாஜி பயன்படுத்திய புலி நக ஆயுதத்தை 3 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்குக் கொடுக்க அந்த அரும்பொருளகம் சம்மதித்துள்ளது.

அமைச்சர் சுதிர் முங்கந்திவார் செய்தியாளர்களுடன் பேசுகையில், “சத்ரபதி சிவாஜி, 1659ல் அப்சல் கானைக் கொல்வதற்கு இந்தப் புலி நக ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டை நாம் கொண்டாடவுள்ளோம். எனவே, அவர் பயன்படுத்திய புலி நக ஆயுதம் மக்கள் பார்வைக்கு சிவாஜி அரும்பொருளகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது,” என்று கூறினார்.

சதாராவில் உள்ள பிரதாப்கர் கோட்டை அடிவாரத்தில்தான் அப்சல் கானை சிவாஜி கொன்றார். ஆகையால், புலி நக ஆயுதத்தைக் காட்சிப்படுத்த சதாரா அரும்பொருளகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்