புதுடெல்லி: உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் 30 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தொடக்க விழாவில் 45 ஆயிரம் பேர் வரை பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மேலும் 18 ஆயிரம் ராணுவ வீரர்களும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள்.
இதற்கிடையே, ஒலிம்பிக் போட்டி பாதுகாப்புப் பணிக்காக இந்திய மோப்ப நாய்கள் பாரிஸ் சென்று உள்ளன.
சிறப்புப் பயிற்சி பெற்ற பத்துச் சிறப்புப் படை வீரர்கள், மத்திய ரிசர்வ் காவற்படையின் (CRPF) மோப்ப நாய்களுடன் அங்கு சென்றுள்ளனர். இந்த மோப்ப நாய்கள் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பல்வேறு விளையாட்டரங்குகளில் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
இந்தியா - பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மோப்ப நாய்கள் பெல்ஜியம் மாலினோஸ் இனத்தைச் சேர்ந்தவையாகும். சந்தேகத்துக்குரிய மனிதனின் இருப்பிடம், குண்டுகளைத் துல்லியமாக கண்டறிதல் போன்றவற்றில் இந்த வகை நாய்கள் மிகவும் சிறப்பாக செயல்படும்.