பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரின் மாகடி சாலையில் அமைந்துள்ள ‘ஜிடி மால்’ என்ற வணிக வளாகத்திற்கு இளையர் ஒருவர், விவசாயியான தனது தந்தையுடன் படம் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், விவசாயி வேட்டி கட்டியிருந்ததால் அவரை வணிக வளாகத்துக்குள் விட மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பெங்களூருவில் இந்தச் சம்பவம் பேசுபொருளானது.
அத்துடன், தற்போது நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டதை அடுத்து, நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பைரதி சுரேஷ் உறுதியளித்தார்.
இந்நிலையில், வேட்டி அணிந்து வந்த விவசாயியை உள்ளே விட மறுத்த ஜிடி மால் வணிக வளாகத்தை ஒரு வாரத்திற்கு மூடி முத்திரை வைத்து கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
வளாகத்தை மூடுவதற்காக வணிக வளாகத்திற்குள் இருந்தவர்களை மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றியதை அடுத்து பெங்களூரு நகர் பரபரப்பாகக் காணப்பட்டது.

