டாக்கா: பங்ளாதேஷில் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் திருத்தம் செய்யக் கோரி மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அந்த இரு பிரிவினருக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.
நாடு முழுவதிலும் நடந்து வரும் போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று டாக்காவில் இரு மாணவர் பிரிவினருக்கும் நடந்த சண்டையில் அரசாங்கக் கட்டடங்களுக்கு மாணவர்கள் தீ வைத்தனர். அவ்வாறு தீவைக்கப்பட்ட கட்டடங்களில் அரசாங்கத்தின் பிடிவி என்னும் தொலைக்காட்சி நிலையமும் ஒன்று.
அந்தத் தொலைக்காட்சி நிலையம் தீப்பிடித்து எரிந்தபோது உள்ளே பணியில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி உயிர் பிழைத்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாயின என்று கூறப்படுகிறது.
இதையடுத்து போராட்டக்காரர்களையும் வன்முறையையும் கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடப்பதையடுத்து, அங்கு பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17ஆம் தேதி, பிரதமர் ஷேக் ஹசினா தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர், வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புச் சம்பவங்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார். அதற்குக் காரணமானவர்கள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கை விடுத்ததோடு அனைவரும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் ஹசினா தொலைக்காட்சியில் உரையாற்றியதற்குப் பின்னர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் நடந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நாட்டின் அரசாங்க வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காட்டுப் பணிகள் ஒரு குறிப்பிட்ட சாராருக்கே ஒதுக்கப்படுகிறது என்பதே போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டு. எனவே அந்த வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டு முறையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதையே போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.