புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் மூன்று சிறுமிகள் குழந்தைத் திருமணத்திற்குத் தள்ளப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18.
இந்த வயதுக்குக் கீழ் ஆணோ பெண்ணோ திருமணம் செய்து கொண்டால் அது குழந்தைத் திருமணம் என வகைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்திய குழந்தைகள் பாதுகாப்பு (ஐசிபி) அமைப்பு குழந்தைத் திருமணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்கப்படுவது 11 விழுக்காடாகவும் குழந்தைகளுக்கு எதிரான மற்ற குற்றங்களில் 34 விழுக்காடாகவும் உள்ளதாக புதிய அறிக்கை விவரம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2022ல் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட மொத்தம் 3,563 வழக்குகளில் வெறும் 181 வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளன.
நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் 92%, பெற்ற தண்டனையின் விகிதம் 11% எனக் கூறப்பட்டுள்ளது.
இப்போதைக்கு நிலுவையில் உள்ள 3,365 வழக்குகளில் தீா்ப்பு வெளியாக 19 ஆண்டுகள் ஆகலாம் என்று குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆா்) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2022ல் மீட்கப்பட்ட 63,513 குழந்தைகளில் 25 விழுக்காடு அளவுக்கு அதாவது 15,748 போ் திருமணம் அல்லது பாலியல் நோக்கத்திற்காக கடத்தப்பட்டதாகவும் குறிப்பாக 15,142 குழந்தைகள் திருமணத்துக்காக மட்டுமே கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைத் திருமணம் தொடா்பான வழக்குகளில் தனிநபா்களைக் கைது செய்வது போன்ற சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தச் சவாலைத் திறம்பட சமாளிக்க முடியும் என்று பெரும்பாலானோா் தெரிவித்துள்ளனர்.

