புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தேர்வு மையங்கள் வாரியாக ‘நீட்’ தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை சனிக்கிழமை (ஜூலை 20) வெளியிட்டது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ஆம் தேதி நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றதால் சர்ச்சை எழுந்தது.
தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரியும், மோசடிகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவு வெளியானது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தனது மதிப்பெண் என்ன என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள், மற்ற தேர்வு மையங்கள், மற்ற நகரங்களில் யார் அதிக மதிப்பெண் பெற்றனர் என்பது தெரியாது.
இதையடுத்து மதிப்பெண் முடிவுகளை முழுமையாக வெளியிட வேண்டும் என்று சனிக்கிழமை (ஜூலை 20) மதியம் 12:00 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது வெளியிடப்பட்ட முடிவால் எந்தெந்த தேர்வு மையங்கள் அல்லது நகரங்களில் மோசடி நடந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்று தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. https://exams.nta.ac.in/ என்ற இணையத்தளத்தின் வாயிலாக நீட் தேர்வு முடிவுகளை அறியலாம்.

