தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு பகுதியில் கூடுதலாக 3,000 ராணுவ வீரர்கள் குவிப்பு

2 mins read
c51eba46-0f4e-47ec-8c51-5c4e4d42f1e8
இந்தியாவின் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒருவர், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜூலை 15ஆம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். - படம்: இபிஏ

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் அண்மையில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

ஜம்முவில் கடுவா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஐந்து வீரர்கள் பலியான ஒரு வாரத்திற்குள் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாதிளுக்கு உதவுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் 40 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜம்மு பகுதியில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து ஒழிக்க ஜம்மு காஷ்மீர் காவல்துறையுடன் ராணுவமும் இணைந்து தொடர் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து பிர்பாஞ்சலின் தெற்குப் பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவதால் அப்பகுதிக்கு 3,000 ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் 400 முதல் 500 வரையிலான சிறப்பு படை வீரர்களும் ஒரு வாரத்திற்கு முன்பு ஜம்மு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

கூடுதல் ராணுவ வீரர்களுடன் ஜம்மு பகுதியில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக்கப்படும் என்றும் இதே பகுதியில் மத்திய ஆயுத காவல் படையினர் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்