நிபா தொற்று பாதிப்பைச் சமாளிக்க மாநிலம் தயாராக உள்ளது: அமைச்சர் வீணா ஜார்ஜ்

நிபா தொற்று பாதிப்பைச் சமாளிக்க மாநிலம் தயாராக உள்ளது: அமைச்சர் வீணா ஜார்ஜ்

2 mins read
5a790030-2122-43b2-8fda-e0eeadc11791
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.  - படம்: ஏஎன்ஐ

திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க மாநிலம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

“214 பேர் நிபா தொற்று தொடர்புப் பட்டியலில் உள்ளனர். அவர்களில், 60 பேர் அதிக ஆபத்தான சூழலில் உள்ளனர்,” என்று கூறிய அவர், தொடர்புப் பட்டியலில் உள்ள அனைவரும் தனிமைப் படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

“மலப்புரத்தில் நிபா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்திற்கும் அரசு தயாராக உள்ளது.

“நிபா தடுப்புப் பணியில் ஈடுபடுவதற்காக மாநில அரசாங்கத்தின் உத்தரவின்படி, 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“முதன்மை தொடர்புப் பட்டியலில் 214 பேர் உள்ளதை அடுத்து மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் 30 தனிமைப்படுத்தப்பட்ட அறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர கோழிக்கோட்டிலும் தேவையான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“அதிக ஆபத்துள்ளவர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்படும்,” என்றுஅமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

“24 மணி நேர நிபா கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. நிபா அறிகுறி உள்ளவர்கள் கட்டுப்பாட்டு அறையை அழைக்கவேண்டும். காய்ச்சல், தலைவலி, கடுமையான இருமல், சுவாசப் பிரச்சினை போன்றவை அதன் அறிகுறிகள்.

“ஒருவருக்கு சுவாசப் பாதிப்புகள் இருந்தால், நீங்கள் அதை மற்றவர்களுக்குப் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிபா தொற்று தாக்கத்தின்போது இதற்கான அறிகுறிகள் காலப்போக்கில் அதிகரிக்கலாம். நோயின் தீவிரம் அதிகரிக்கும்போது தொற்று பரவும் அபாயமும் அதிகரிக்கலாம்,” என்று வீணா ஜார்ஜ் மேலும் கூறினார்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். தொடர்புப் பட்டியலில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஒரு வீட்டில் ஒருவர் மட்டுமே தொடர்புப் பட்டியலில் இருந்தாலும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டாம் எனவும் வீணா ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்