கேங்டாக்: சிக்கிமில் நுழையும் அனைத்து சுற்றுலா வாகனங்களிலும் இனி ஒரு பெரிய குப்பைப் பை கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், சமூகத்தின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற கழிவுகளை அகற்றுவதற்கு குப்பைப் பைகளைப் பயன்படுத்தும்படி சுற்றுலாப் பயணிகளிடம் தெரிவிப்பது பயணங்களை ஏற்பாடு செய்பவர்கள், பயண முகவைகள், வாகன ஓட்டுநர்களின் பொறுப்பாகும்.
அவ்வப்போது சுற்றுப்பயணிகள் செல்லும் வாகனங்களில் இதுகுறித்து சோதனை நடத்தப்படும். உத்தரவை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மேலும் கூறியுள்ளது.
கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்து சுற்றுப்பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தூய்மை குறித்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட வடகிழக்கு இந்திய மாநிலமான சிக்கிமில், ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். எழில் கொஞ்சும் இமயமலை உள்ளிட்ட இடங்களைக் காண ஒவ்வோர் ஆண்டும் 20 லட்சத்திற்கும் மேலான சுற்றுப்பயணிகள் ஈர்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.