பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல் ஐடி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘மனிதாபிமானமற்ற செயல் இது,’ எனக் கண்டனம் தெரிவித்துள்ள ஐடி ஊழியர்கள், கூடுதல் வேலை நேரத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள், பணிநீக்கம் குறித்து வேதனை தெரிவித்துள்ளனர்.
நீட்டிக்கப்பட்ட வேலை நேரமாக வாரத்திற்கு 70 மணிநேரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டால், நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையம் என்று அழைக்கப்படும் மாநிலத் தலைநகரான பெங்களூரில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு இவ்விவகாரம் குறித்து இதுவரை எதுவும் கூறாமல் மௌனமாக இருந்து வருகிறது.
கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம், முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு இந்த வேலை நேரத் திட்டத்தை “மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், ஐடி/ஐடிஇஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 20 லட்சம் ஊழியர்களுக்கு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர முனைவது பெரும் சவாலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
“அடிமைத்தனத்தை ஊழியர்கள்மீது திணிக்கும் மனிதாபிமானமற்ற முயற்சியை எதிர்க்க அனைத்து தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களும் ஒன்றிணைந்து கைகோத்து முன்வரவேண்டும்,” என்று தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கர்நாடகா கடைகள், வணிக நிறுவனங்கள் சட்டம் 1961ஐ திருத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வரும் நிலையில், இந்த திருத்தத்தில் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக திருத்தம் செய்ய வேண்டும் என ஐடி நிறுவனங்கள் கோரியுள்ளன.
தற்போது, தொழிலாளர் சட்டங்கள் 12 மணி நேர வேலை நேரத்தை அனுமதிக்கின்றன.
ஆனால், ஐடி துறையின் புதிய முன்மொழிவில், “ஐடி/ஐடிஇஎஸ் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டும். அல்லது மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக 125 மணி நேரத்துக்கு மேல் வேலைநேரம் இருக்கவேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது என்றும் விரைவில் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐடி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
“வணிக நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் இயந்திரமாக மட்டுமே ஐடி ஊழியர்களை மாநில அரசு கருதுகிறது,” என ஊழியர்கள் தரப்பில் தங்களது கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.
“புதிய சட்டத் திருத்தத்தால் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் வேலை நீக்கப்படும் அபாயம் உள்ளது.
“ஐடி துறையில் 45% ஊழியர்கள் மனச்சோர்வு பிரச்சினையையும் 55% பேர் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இப்போது வேலை நேரத்தை அதிகரித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும்,” என்று கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கமான கேஐடியூ தெரிவித்துள்ளது.

