திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு அவனது நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் உயிரிழந்தான். இதனிடையே, அவனது கிராமத்தில் மாணவனுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த 2018ல் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா தொற்றின் தாக்கம் இருந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அது தலைதூக்கியுள்ளது.