தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் நாளிலேயே காரசார விவாதம்

2 mins read
43b2e9cc-bfe8-4a9b-9fb2-9415f0eee918
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “நீட் முறைகேடுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று பேசினார். தொடர்ந்து திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, “நீட் தேர்வால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்.” என்றார்.

இந்தியத் தேர்வு முறையில் பிரச்சினை உள்ளது: ராகுல் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நடந்த சூடான விவாதங்களுக்கு மத்தியில் எழுந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவின் தேர்வு முறைகளில் உள்ள பெரிய பிரச்சினை வெட்ட வெளிச்சமாகி உள்ளது,” என்றார்.

“பணம் இருந்தால், தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இந்த உணர்வு எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது. இந்த சிக்கலை சரிசெய்ய அரசாங்கம் என்ன செய்கிறது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, “நாட்டின் தேர்வு முறையைக் குப்பை என்று அழைக்கும், ராகுல் காந்தியின் பேச்சை நான் கண்டிக்கிறேன்,” என்றார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

“மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்”

“விதிகளுக்குப் புறம்பாக புதிய மருந்து சோதனைகளைச் செய்தும் முழுமையான சோதனைகளைச் செய்யாமலும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்