ஆந்திரா, பீகார் மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கூடுதல் நிதி

1 mins read
116ef06e-f0b7-4452-9ba8-1c6bc9348644
மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்தார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்தார்.

ஆந்திரா மற்றும் பீகார் மாநில முதல்வர்கள் தங்களின் மாநில வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த கூடுதல் நிதி கோரியிருந்தனர். இந்நிலையில், பொருளியலில் பின்தங்கியுள்ள பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் உரையாற்றியபோது திருவாட்டி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ. 26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

வெள்ளம், பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,000 கோடி பீகார் மாநிலத்துக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், “அம்மாநிலத்தில் விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

“ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக ரூ. 15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி நிதி வழங்கப்படும்.

“அம்மாநிலத்தில், மின்சாரம், ரயில்வே, சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும். ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும்,” என்று திருவாட்டி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்ஆந்திராபீகார்