புதுடெல்லி: இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிகளில் கிட்டத்தட்ட $32.29 பில்லியன் (200734659800 ரூபாய்) செலவிடும் என அந்நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டத்தில் புதிய வேலைகளை உருவாக்கவும், முக்கிய கூட்டணி பங்காளிகளைத் திருப்திப்படுத்தவும் பில்லியன் கணக்கான டாலர் திட்டங்களை இந்தியா வெளியிட்டுள்ளது.
கிராமப்புறத் திட்டங்களுக்கு ரூ. 2.678 டிரில்லியன் (S$43.07 பில்லியன்), கூட்டணிக் கட்சிகள் ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக செலவழிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் 2024-25 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தெரிவித்தார்.
இந்தியாவின் நகர்ப்புறங்களில் அதிகாரபூர்வ வேலையின்மை விகிதம் 6.7 விழுக்காடாக உள்ளது. ஆனால், இந்தியப் பொருளியலைக் கண்காணிக்கும் தனியார் மையம் ஒன்று அது 8.4% எனக் கூறுகிறது.
இந்நிலையில், ரூ.2 லட்சம் கோடி செலவில் 4.1 கோடி இளைஞர்கள் ஐந்து ஆண்டுகளில் பயன்பெறும் வகையில் திட்டங்களை இந்திய அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ₹1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
‘வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை’ வழங்கும் மூன்று திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது என்றார் நிர்மலா சீதாராமன்.
முதலாவதாக, ஊழியரணியில் புதிதாகச் சேரும் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை மத்திய அரசு வழங்கும். சேமநிதிப் பங்களிப்பு வழங்கும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
இதன்மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள். ஒரு மாத சம்பளம் 3 தவணைகளாக நேரடி பண பரிமாற்றமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 2.10 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது, உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை இந்தத் திட்டம் ஊக்குவிக்கும். முதலாளி இருவருக்கும் நேரடியாக குறிப்பிட்ட அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மூன்றாவது திட்டம், முதலாளிகளை மையமாகக் கொண்டது. அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. இத்திட்டம் 50 லட்சம் பேருக்குக் கூடுதல் வேலைவாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், உயர்கல்விக்கான மானியக் கடன்களை வழங்கும் திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளதாக திருவாட்டி நிர்மலா குறிப்பிட்டார்.
“இந்த வரவுசெலவுத் திட்டம் விவசாயத்தில் உற்பத்தித் திறன் பெருக்கம்; வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு; மனித வள மேம்பாடு; சமூக நீதி; உற்பத்தி மற்றும் சேவைகள்; நகர்ப்புற மேம்பாடு; எரிசக்தி பாதுகாப்பு; உள்கட்டமைப்பு; கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் ஆகிய ஒன்பது அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது’‘ என்று அவர் தெரிவித்தார்.
அனைவருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு இந்த முன்னுரிமைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்களிலும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை வரவுசெலவுத் திட்டம் எதிர்நோக்குகிறது என்றார் அவர்.
“இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் நலன் சார்ந்து திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். அத்துடன் கிராமப்புற பொருளியல், வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே அரசின் கொள்கை இலக்காக உள்ளது எனவும் அவர் கூறினார்.
‘’உலகளவில் பொருளியல் வளர்ச்சி சீராக இருந்தாலும், பல இடங்களில் வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இல்லாமல் உள்ளது. அரசியல் நிச்சயமற்ற தன்மை, பன்னாட்டு உறவுகளில் நீடிக்கும் சிக்கல், கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி உயர்வு உலகளவில் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது, வரும் நாட்களிலும் இது தொடரும்’‘ என நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்தியாவின் பணவீக்கம் 4% ஆக உள்ளது. மக்களுக்கான வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உண்மையான சராசரி வரிவிதிப்பு குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரு மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்யும் பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களையும் அவர் வெளியிட்டார்.
“வரவுசெலவுத் திட்டம் இளைஞர்கள், ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமானது’‘ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
“பட்ஜெட் நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது,” என நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சனம் செய்துள்ளார். பட்ஜெட் அரசியல் சார்புடையது.
“மக்களுக்கு எதிரான பட்ஜெட். மேற்கு வங்க மாநில மக்கள் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை,” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.